இயக்குநர் லெனின் பாரதி கமல்ஹாசனின் அடுத்த படத்துக்கான பதிவை விமர்சித்து பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவான ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தை இயக்கியவர் லெனின் பாரதி. ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா நடிப்பில் கடந்த 2018ல் வெளியான இப்படம் பல விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் நியூயார்க் திரைப்பட விழாவில் பங்கேற்று வரவேற்பு பெற்றது.
கமல்ஹாசனின் பிறந்தநாளை 72வது முன்னிட்டு, அவர் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் தனது 237-வது புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சித்தா, வீரதீர சூரன் படங்களின் இயக்குநர் சு. அருண் குமார் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இந்த புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்ற அறிவிப்புடன் “பலிவாங்கல் ரத்தத்தால் மட்டுமே சரி செய்யப்படும்” என்ற குறிப்பிட்ட வாசகம், தற்போது தமிழ் திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் மாபெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
இந்த நிலையில் இதனை விமர்சித்து இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “கதாநாயக மயக்க சினிமாவால் ஏற்கனவே இளைஞர்கள் மனதில் வன்முறையின் ரத்த வாசனை வீசிக் கொண்டிருக்கிறது. இதில் கமல்ஹாசன் கொஞ்சமும் சமூக சிந்தனையில்லாமல் ‘பலிவாங்கல் ரத்தத்தால் மட்டுமே சரி செய்யப்படும்’ என தனது அடுத்த திரைப்பட விளம்பரத்தை முன்னிறுத்துவது கண்டனத்திற்குரியது” என கூறியுள்ளார்.
அரசியல் கட்சியின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கும் கமல்ஹாசன், வன்முறையை தூண்டும் வகையில் இப்படிப்பட்ட ரத்தவெறி பிடித்த விளம்பர வாசகத்தை பயன்படுத்தலாமா என பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ‘சித்தா’ போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படத்தை கொடுத்த சு. அருண் குமார் - கமல்ஹாசன் கூட்டணியின் படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.