சென்னை,
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் 1983-ம் ஆண்டு தனது திரைப்பயணத்தை துவங்கினார். இவர் "பகல் நிலவு, மவுனராகம், நாயகன், தளபதி, அஞ்சலி, கன்னத்தில் முத்தமிட்டாள், அக்னி நட்சத்திரம், இருவர், பொன்னியின் செல்வன்" என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கினார். இவர் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனை வைத்து தக் லைப் என்ற படத்தை இயக்கினார். அப்படம் கடந்த 5.6.2025 அன்று வெளியானது.
இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னம் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மணிரத்னம் பிறந்தநாளையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
"ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, தணியாத தாகத்துடன் சினிமாவை அணுகும் இயக்குநர் மணிரத்னத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! அவரது பேரார்வம், புதிதாக வரும் இளைஞர்களுக்கும் பாடம்!
மனித மனங்களின் ஆழத்தை அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தும் மேலும் பல படைப்புகளைத் மணிரத்னம் வழங்கி மகிழ்விக்க விரும்புகிறேன்.''
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.