சென்னை,
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்களை இயக்கி வரவேற்பை பெற்றவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் ‘பைசன்’ என்ற படம் வெளியானது. கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனர் மாரிசெல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படம் சரித்திர கதையில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘வாழை’. இந்தப் படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், கர்ணன் ஜானகி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
தனுஷ் படத்தை முடித்த பின்னர் ‘வாழை 2’படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் கதிர் மற்றும் கயாடு லோகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நாளை காலை 10 மணிக்கு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார். இது மாரிசெல்வராஜ் இயக்கும் 6வது படமாகும்.