சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் வென்று விஜய்யின் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். நேரில் சந்தித்தும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருவதையும் பார்க்க முடிகிறது. விஜய் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பதால், திரைத்துறையில் அவருடன் நெருங்கி பழகிய இயக்குனர்கள், சக நடிகர்கள் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் முதல் அமைச்சர் விஜய்யை இயக்குனர் முருகதாஸ் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிகிறது. விஜய்யை சந்தித்தது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் முருகதாஸ் பதிவிட்டுள்ளார். விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய மெகா ஹிட் படங்களை இயக்கியது முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.