சினிமா செய்திகள்

“அங்கீகாரம்” படத்தை பாராட்டிய இயக்குனர் பா.ரஞ்சித்

ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் கே.ஜே.ஆர் நடிக்கும் ‘அங்கீகாரம்’ படம் கடந்த 26ம் தேதி வெளியானது.

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கீகாரம்’. இயக்குநர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜே.பி. தென்பாதியான், தடகள வீரர்களின் வாழ்க்கைச் சவால்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் 'அறம்', 'அயலான்' உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், அஜித் கோஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் கடந்த 26ஆம் தேதி வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இதுவரை ரூ. 40 லட்சம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் போதுமான புரமோஷன் இல்லாததால், படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

இந்த நிலையில் இப்படத்திற்கு பா.ரஞ்சித் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அங்கீகாரம் பெறத் துடிக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் அசல் பிரதிபலிப்பாக இந்தப் படம் அமைந்துள்ளது. சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் இயக்குநர் ஜேபி தென்பதியான், தான் சொல்ல வந்த கருத்தை எந்த சமரசமும் இன்றி நேர்மையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இந்தப் படத்திற்கு உறுதுணையாக நின்ற கேஜேஆர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். இந்த நல்ல படைப்புக்கு மக்கள் அனைவரும் தங்களது ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.