சென்னை,
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான ‘விலங்கு’ வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூரி நடித்த ‘மாமன்’ படத்தை இயக்கியிருந்த அவர், தற்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள கிரைம் திரில்லர் இணையத் தொடரான ‘வாரண்ட்’ தொடரில் பிரசாந்த் பாண்டியராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த தொடரில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், கௌசல்யா, அருள் ஜோதி, சாயாதேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடரை சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.
கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இந்த அதிரடி குற்றவியல் தொடர், சாதாரண காவலரான ‘கோட்டை கருப்பசாமி’யின் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத மாற்றங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த தொடரின் முதல் 4 எபிசோட்டுகள் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இத்தொடர் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால் பார்வைகளும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், பிரசாந்த் பாண்டிராஜ் மற்றும் அவரது ‘வாரண்ட்’ குழுவினரை சந்தித்து இயக்குநர் பாண்டிராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரசாந்த் பாண்டிராஜ் இயக்குநர் பாண்டிராஜ்ஜிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.