மண் சாலைகளில் நடக்கும் கார் பந்தயத்தை மையப்படுத்தி ‘மட்டி’ என்ற படத்தை இயக்கியவர் பிரகபல். இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து அவர் இயக்கிய படம், ‘ஜாக்கி’. கிடா சண்டையை மையமாக வைத்து உருவான இப்படத்தில் ‘மட்டி’யில் நடித்த யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ் முதன்மை வேடங்களில் நடித்தனர்.
அம்மு அபிராமி நாயகியாக நடித்த இந்தப் படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியானது. இப்போது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகியுள்ள இப்படம் டிரெண்டிங்கில் உள்ளது. இதுபற்றி இயக்குநர் பிரகபல் கூறும்போது, “‘ஜாக்கி’ கிடா சண்டையை மையப்படுத்திய கதை. அந்த சண்டைக்குள் இருக்கும் வாழ்வியல், கிடாவுக்கும் அதை வளர்ப்பவர்களுக்குமான பிணைப்பு ஆகியவற்றை கொண்டு அப்படத்தை உருவாக்கினேன். அது தமிழ் மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிப் போன விளையாட்டு. மண் சார்ந்த விளையாட்டு என்பதால் அதை இயக்கினேன். இது தியேட்டர் ரிலீஸை விட, அமேசானில் வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டாப் 10 படங்களின் வரிசையில் ‘ஜாக்கி’யும் இடம்பெற்றுள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி.
அடுத்து ‘மட்டி’ படத்தின் 2-ம் பாகத்தை இயக்க இருக்கிறேன். அதற்கான கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. முதல் பாகத்துக்கும் இதற்கும் தொடர்பு இருந்தாலும் கதைக் களம் வேறு இடத்தில் நடக்கும். இந்த படம் வெறும் ஸ்போர்ட்ஸ் மூவி மட்டும் கிடையாது, ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும். முதல் பாகத்தில் இருக்கும் விஷயங்கள் இதில் இருக்காது பான் இந்தியா முறையில் அப்படத்தை உருவாக்குகிறோம். முதல் பாகத்தில் நடித்தவர்கள் இதிலும் நடிக்கிறார்கள். மற்ற மொழிகளில் இருந்தும் நடிகர்கள் நடிக்கிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறது” என்றார்.