மலையாள சினிமாவில் இயக்குனர், கதாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் ரஞ்சித் பாலகிருஷ்ணன். பல்வேறு வெற்றிப்படங்களை படைத்திருக்கும் இவர் 3 முறை தேசிய விருதும் பெற்றவர் ஆவார். இதற்கிடையே இயக்குனர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் மீது நடிகை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை சமீபத்தில் முன்வைத்தார். படப்பிடிப்பின் போது தன்னை 'கேரவனுக்குள்' கூப்பிட்டு பாலியல் ரீதியாக அத்துமீறியதாக அந்த புகாரில் நடிகை குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய கொச்சி போலீசார், 4 பிரிவுகளின் கீழ் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் தொடுபுழாவில் வைத்து ரஞ்சித் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே மலையாள சினிமாவை புரட்டிப்போட்ட ஹேமா கமிட்டி அறிக்கையிலும் இயக்குனர் ரஞ்சித் பெயர் அடிபட்டது. தவறான கண்ணோட்டத்தில் தன்னிடம் அத்துமீறியதாக பெங்காலி நடிகை ஒருவர் ஏற்கனவே அவர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
தற்போது மீண்டும் பாலியல் புகாரில் ரஞ்சித் சிக்கிய நிலையில் , மலையாள திரை உலகின் தொழிலாளர் சம்மேளனத்தில் இருந்து ரஞ்சித் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளர். சம்மேளனத்தில் உள்ள உறுப்பினராக உள்ள ஒருவர் இப்படி பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானால் அவரை உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்குவது முதன்மையாக எடுக்கப்படும் நடவடிக்கை இது எனவும் சம்மேளனத்தின் தலைவரும் இயக்குனருமான பி உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.