சினிமா செய்திகள்

இயக்குனர் சுந்தர் சி மீது பண மோசடி புகார்

அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சி வேட்பாளராக சுந்தர் சி களமிறங்கி இருக்கிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி சினிமாவை தாண்டி அரசியல் களத்திலும் தற்போது நுழைந்திருக்கிறார். மதுரை மத்திய தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சி வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார். தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் சுந்தர் சி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர் மணிகண்ட ராமன் அளித்துள்ள புகார் மனுவில், 'கலகலப்பு-3' படத்துக்காக சுந்தர் சி.யை அணுகினேன் அப்போது படத்துக்கு ரூ.20 கோடி பட்ஜெட் என்றும், தனக்கு சம்பளமாக ரூ.5 கோடி என்றும் பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்பட்டு சுந்தர் சி எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டார்.

இதையொட்டி அவருக்கு ரூ.50 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட் டது. நடிகர், நடிகைகளுக்கும் ரூ.59 லட்சம் அளவில் முதற்கட்ட சம்பளம் வினியோகமும் செய்யப்பட்டது. ஆனால் சொன்னபடி, சொன்ன தேதியில் இந்த படத்தை சுந்தர்.சி இயக்கவில்லை. இந்த சூழலில் அவரது இயக்கத்தில் உருவான 'அரண்மனை-4'படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்துவிட்டது.

வெற்றி வேகத்தில் இருந்த சுந்தர் சி எங்கள் படத்துக்கான பட்ஜெட் தொகையை ரூ.30 கோடியாக அதிகரித்ததுடன், தனக்கு சம்பளமாக ரூ.10 கோடி வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியும். உடன்பாடு ஏற்படாத நிலையில் 'கலகலப்பு-3' படம் எடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து, வாங்கிய முன் தொகையை கொடுக்குமாறு சுந்தர் சி.யிடம் கேட்டுக் கொண்டோம்.

ஆனால் முன்பணத் தொகையையும் கொடுக்காமல் சுந்தர் சி எங்களை மிரட்டி வருகிறார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார். சுந்தர் சி மீது புகார் கொடுக்கப்பட்ட விவகாரம் திரையுலகம் தாண்டி அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.