சுசி கணேசன் இயக்கி வந்த ‘ஒரண்ட’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சுசி கணேசன் 2002-ல் ‘பைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் பிரசன்னா மற்றும் கனிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம், கல்லூரி நண்பர்களை மையமாக கொண்டது. அதே ஆண்டில், அவர் ‘விரும்புகிறேன்’ படத்தை இயக்கினார். அதனைத் தொடர்ந்து, ஜீவன் மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் ‘திருட்டுப் பயலே’ படத்தையும் இயக்கினார். 2017ல் பாபி சிம்ஹா, பிரசன்னா மற்றும் அமலா பால் ஆகியோர் நடிப்பில், சுசி கணேசன் இயக்கத்தில் ‘திருட்டுப் பயலே 2’ வெளியானது.
அதன் பிறகு படம் இயக்காமல் இருந்த சுசி கணேசன் சமீபத்தில் ‘ஒரண்ட’ என்ற படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ‘ஒரண்ட’ படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததையும், தனது பிறந்தநாளையும் படக்குழுவுடன் ஒன்றாக கேக் வெட்டி இயக்குநர் சுசி கணேசன் கொண்டாடியுள்ளார்.
தலைப்பு மட்டும் வெளியாகி உள்ள நிலையில், படத்தின் கதை, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் போன்ற விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக், ரிலீஸ் தேதி போன்ற விபரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.