சினிமா செய்திகள்

“துரந்தர்” படத்தை விமர்சித்த இயக்குநர் வெற்றிமாறன்

சோமிதரண் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘நீளிரா’ படத்தின் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் ‘துரந்தர்’ படத்தினை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின்‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து ‘நீளிரா’ படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை இலங்கைத் தமிழர் சோமிதரண் இயக்கியுள்ளார். இதில் சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது, ரோஹித், நவயுகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சிவா பத்மயன் இசையமைத்துள்ளார். இந்தப் பட டிரெய்லர் கவனம் ஈர்த்து வருகிறது. இத்திரைப்படம் ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘நீளிரா’ பட முன்னோட்ட நிகழ்ச்சி விழாவில் வெற்றிமாறன் ‘துரந்தர்’ படத்தினை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அவர் “நீளிரா திரைப்படம் வெறுப்பையோ வன்முறையையோ விற்கவில்லை. கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டு, வெறுப்பை பிரசாரம் செய்து பணம் சம்பாதிக்க நினைக்கவில்லை. போரில் ஏற்பட்ட பாதிப்பை அருகில் இருந்து பார்க்கும் உணர்வைத் தருகிறது. இந்தக் காலத்தில் எல்லாமே பிரசாரமாக மாறுகிறது. இந்த பிரசாரம் நமது நினைவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பண மதிப்பிழப்பின்போது வரிசையில் நின்று யார் இறந்துபோனார்கள் என்று நமக்குத் தெரியும். அதனால் யார் பாதிப்படைந்தார்கள் என்றும் நமக்குத் தெரியும். ஆனால், இந்தப் பாதிப்பை பிரசார படங்களின் மூலம் எளிமையாக மாற்றிவிட முடிகிறது. இந்தமாதிரி நேரங்களில் நாம் வெறுப்பு பிரசாரத்துக்கு எதிராக நல்ல படங்களை எடுக்க வேண்டும். இந்தப் படம் வெற்றி அடையும் ; வெற்றியடைய வேண்டுமென நினைக்கிறேன். தொடர்ந்து இந்த மாதிரி படங்களை இயக்குநர் எடுக்க வேண்டும்“ என்றார்.

ஆதித்யா தார் இயக்கிய ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படத்தில் பண மதிப்பிழப்பை சரியென கூறியிருந்த இப்படம் ரூ.1,088 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT