சினிமா செய்திகள்

“திரிஷ்யம் 4” படம் குறித்த கேள்விக்கு இயக்குநரின் பதில்

மோகன்லால் , மீனா நடித்துள்ள ‘திரிஷ்யம் 3’ படம் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் ‘திரிஷ்யம்’. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க ‘பாபநாசம்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இது நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.இதிலும், மோகன்லால் மற்றும் மீனா நடித்திருந்தனர்.

இரண்டாம் பாகத்தின் வெற்றியை அடுத்து, தற்போது மீண்டும் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திலும் மோகன்லால் மற்றும் மீனா நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது.

பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ‘திரிஷ்யம் 3’இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தலைமையிலான ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம் ‘திரிஷ்யம்’ படம் குறித்தான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், இப்படத்தின் நான்காம் பாகம் வருமா? என்றும் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், “இப்படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இதற்கு மேலும் இந்த கதையை வளர்த்துக் கொண்டே போக எனக்கு விருப்பம் இல்லை. அப்படி வளர்த்துக் கொண்டே போனால் கதையின் சுவாரசியம் குறைந்து விடும். அதனால், இப்படம் மூன்றாம் பாகத்துடன் நிறைவடைகிறது” என்று தெரிவித்தார்.

‘திரிஷ்யம் 3 ’ திரைப்படத்தை முன்பு போலவே முதலில், மலையாளத்தில் வெளியிடுவோம் என்று இயக்குநர் ஜீது ஜோசப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.