சினிமா செய்திகள்

எங்களை சினிமா சங்கி, கூத்தாடி என்று விமர்சித்த திமுகவுக்கு சத்யராஜ், பிரகாஷ்ராஜ் கூத்தாடிகள்... - நடிகை குஷ்பு

பழனிவேல் தியாகராஜன் சுந்தர் சியை சினிமா சங்கி என குறிப்பிட்டு விமர்சித்தது பேசும்பொருளானது. அந்த விமர்சனங்களுக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரம் வருகிற 21-ந்தேதி மாலையுடன் முடிவடைகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் தலைவர்கள் சூறாவளியாக சுற்றுப்பயணம் செய்து தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், மதுரையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பிரசாரம் செய்தார். அப்போது மதுரை மத்தி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி-க்கு நடிகர் பிரகாஷ் ராஜ் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து பேசினார். அவர் “கலைஞர் கருணாநிதி இந்த நாட்டுக்கு செய்திருக்கிற பணி அதிகம். நான் எந்த கட்சிக்காரனும் கிடையாது. மூன்று நாட்கள் முன்பு வரை சினிமா சூட்டிங்கில் இருந்த சுந்தர் சி வேட்பாளராக ஆனது எப்படி?

புதிய நீதிக்கட்சியில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்..? அதன் கொள்கை என்ன?. சினிமாவில் இயக்குநர் ஆவதற்கு எத்தனை விஷயங்களை கஷ்டப்பட்டு கற்றிருப்பீர்கள். ஆனால், எம்.எல்.ஏவாக மட்டும் உடனே ஆகிவிடுவீர்களா?. உங்கள் மனைவி குஷ்பு 10 வருடங்களாக அரசியல் செய்து கேள்விகளை கேட்கிறார். அவருக்கு கிடைக்காத சீட் உங்களுக்கு எப்படி கிடைத்தது என யோசிக்க மாட்டீர்களா?. இந்த சீரழிவை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

சுந்தர் சிக்கு ஆதரவாக குஷ்பு பரப்புரை செய்துவருகிறார். பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் பரப்புரை செய்துவருகின்றனர். இவ்வாறு சினிமா பிரபலங்கள் நிறைந்த நட்சத்திர தொகுதியாக மதுரை மத்திய தொகுதி உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் பிரகாஷ் ராஜின் இந்த விமர்சனங்களுக்கு குஷ்பு பதிலடி கொடுத்திருக்கின்றார். அவர் “பிரகாஷ் ராஜ் என் நல்ல நண்பர் தான். நான் கட்சி மாறியதாக அவர் சொல்கின்றார். ஆனால் திமுகவில் இருக்கும் பெரும்பாலான அமைச்சர்கள் திமுகவினர் தானா ?செந்தில் பாலாஜி, ரகுபதி, சேகர் பாபு என அனைவரும் பிற கட்சியில் இருந்து திமுகவிற்கு வந்தவர்கள் தானே ? பிரகாஷ் ராஜ் தேர்தலில் போட்டியிட்டு எப்படி டெபாசிட் கூட வாங்காமல் போனார். அவருக்கும் சுந்தர் சிக்கும் இருக்கும் வித்தியாசங்களை அவரே தெரிந்துகொள்வார். எங்களை சினிமா சங்கி, கூத்தாடி என சொல்கின்றார்கள். ஆனால் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக சத்யராஜ், பிரகாஷ் ராஜ் போன்ற சினிமா பிரபலங்கள் தான் பேசி வருகின்றனர். அப்போ உங்களுக்கு சினிமா ஆளுங்கதானே தேவைப்படுகின்றது. எனவே என் கணவர் இதே கேள்வியை கேட்கலாமே ? இதே கேள்வியை பிரகாஷ் ராஜ் ஸ்டாலினிடமும், உதயநிதி ஸ்டாலினிடமும் கேட்பாரா ? ” என பிரகாஷ் ராஜின் பேச்சுக்கு குஷ்பு. பதிலடி கொடுத்துள்ளார்.