சினிமா செய்திகள்

திரைப்படங்களில் தான் பாடியதிலே கடினமான பாடல் என்று எஸ்.ஜானகி எதை கூறினார் தெரியுமா..?

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட பல இந்திய மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர் எஸ்.ஜானகி.

மைசூர்,

'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்று கொண்டாடப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி (88), வயது முதிர்வு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவு, திரை உலகில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

4 முறை தேசிய விருது

பிரபல பின்னணி பாடகி ஜானகி இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட பல இந்திய மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். 4 முறை தேசிய விருது பெற்றவர்.

காதலின் தீபம் ஒன்று..

தனது குரலால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் பாடகி ஜானகி அனைத்து வயதினருக்கும் ஏற்றார்போல் பாடல்களை பாடக்கூடிய வல்லமை படைத்தவர்.6 வயது முதல் 60 வயது வரை என தனது குரலில் வித்தியாசம் காட்டி பாடும் திறமை கொண்டவர். 'கண்ணா நீ எங்கே, வா வா நீ இங்கே' என்ற பாடலில் 2 வயது குழந்தை போலவும், 'காதலின் தீபம் ஒன்று' பாடலில் இளம்பெண் குரல் போன்றும் இவரது குரல் வளம் அமைந்திருக்கும்.

காதல் கடிதம் தீட்டவே..

'சிங்கார வேலனே தேவா...', 'ராதைக்கு ஏற்ற கண்ணனோ...' 'தூரத்தில் நான் கண்ட உன் முகம்...', 'மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்...' போன்ற பாடல்களில் அவரது குரலில் மழலை தன்மை மிகுதியாகவே எட்டிப் பார்க்கும். 'ஜோடி' படத்தில் இடம் பெற்ற 'காதல் கடிதம் தீட்டவே... என்ற பாடலில் அவரது குரல் எதிரொலித்தது உணரலாம்.

இளம் வயதில் உதிரிப்பூக்கள் படத்தில் இடம் பெற்றிருந்த 'போடா போடா போக்கை 'என்ற பாடலை முதியவர் குரலில் பாடி அசத்தியிருப்பார்.

கடினமான பாடல்

1977-ம் ஆண்டு வெளியான 'ஹேமாவதி' என்ற கன்னடத் திரைப்படத்தில் வெளியான 'சிவா சிவா என்னட நாளிக்கே ஈகே' என்ற பாடல்தான் தான் பாடிய பாடல்களிலேயே மிகவும் கடினமான பாடல் என்று பலமுறை ஜானகி குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பாடல் மிகவும் சவாலானதாக இருந்ததற்கு காரணம், இசையமைப்பாளர் இந்தப் பாடலை தோடி மற்றும் அபோகி ஆகிய இரண்டு வெவ்வேறு ராகங்களை ஒவ்வொரு மாற்று வரியிலும் மாறி மாறிப் பாடும் விதமாக அமைத்ததே ஆகும். ராகங்களின் இந்த நுட்பமான மற்றும் விரைவான மாற்றம் காரணமாக, இதை தனது திரை வாழ்க்கையின் மிகவும் கடினமான பாடல் என்று எஸ். ஜானகி குறிப்பிட்டுள்ளார்.