தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் இரண்டு தசாப்தங்களாக முன்னணி கதாநாயகியாக தனது இடத்தை தக்கவைத்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமின்றி, இந்தி வலைத் தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், சிறப்புப் பாடல்களிலும் தனது நடனத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஒரு சிறப்புப் பாடலில் நடிக்க அவர் சுமார் ரூ.6 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் 'புருஷன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமன்னா பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய தமன்னா, "ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் பாடலை 'ஐட்டம் பாடல்' என்று குறிப்பிடுவதை நான் விரும்புவதில்லை. அந்தச் சொல் பெண்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் இல்லை. ஒரு பாடலை உருவாக்குவதற்காக நடிகைகள் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த கடின உழைப்பை செலுத்துகிறோம். அந்த உழைப்பை இழிவுபடுத்தும் வகையில் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது சரியல்ல" என்று தெரிவித்தார்.
மேலும், "ஒரு பாடலின் பின்னால் இருக்கும் உழைப்பை படக்குழுவினர்தான் முழுமையாக அறிவார்கள். அதனால் அந்த உழைப்புக்கு உரிய மரியாதை கிடைக்கும் வகையில் கண்ணியமான சொற்களை பயன்படுத்த வேண்டும். பெண்களின் உழைப்புக்கும் பங்களிப்புக்கும் உரிய மதிப்பை அனைவரும் வழங்க வேண்டும். இதை மக்கள் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி" என்று தமன்னா வலியுறுத்தினார்.
தமன்னாவின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான சொற்களுக்கு பதிலாக மரியாதைக்குரிய சொற்களை பயன்படுத்த வேண்டும் என்ற அவரது கருத்து பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.