சென்னை,
இயக்குநர் பேரரசு, “பாக்யராஜை அசிங்கப்படுத்த வேண்டாம்” என கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முக திறமையால் பளிச்சிட்டவர் பாக்யராஜ்.
ரசிகர்களின் மனநிலையை சரியாக புரிந்து, சாதாரண குடும்ப வாழ்க்கையை சுவாரசியமான திரைக்கதையாக மாற்றிய படைப்பாளி பாக்யராஜ், 'திரைக்கதை மன்னன்' என்று திரையுலகில் கொண்டாடப்பட்டார். ஒரு கை ஓசை, மவுன கீதங்கள், இன்று போய் நாளை வா உள்பட தமிழ் சினிமாவில் நின்று பேசும் பல படைப்புகளை வழங்கியவர் பாக்யராஜ். சமீபத்தில் திரையுலகில் தனது பொன்விழாவை கொண்டாடினார்.
பாக்யராஜின் மனைவி பூர்ணிமாவும் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் ஆவார். இவர்களுக்கு சரண்யா என்ற மகளும், சாந்தனு என்ற மகனும் உள்ளனர். இதில் சரண்யா 'பாரிஜாதம்' என்ற படத்தில் நடித்தார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார். மகன் சாந்தனு நடிகராக இருக்கிறார். சாந்தனுவின் மனைவி கிகி நடிகையும், நடன கலைஞரும் ஆவார்.
முக்கியமான பட விழாக்களிலும், திரைக்கதை பயிற்சி வகுப்புகளிலும் தவறாமல் பங்கெடுத்து வந்த பாக்யராஜ், சமீபத்தில் கோவாவில் நடந்த நடிகை குஷ்பு மகள் அவந்திகா திருமண விழாவுக்கு சென்று மணமக்களை வாழ்த்தி வந்தார்.
நீண்ட நேரம் கழித்து உறங்க சென்ற பாக்யராஜ், நேற்று அதிகாலை எழுந்து நடைபயிற்சி முடித்து வீடு திரும்பியுள்ளார். அப்போது வந்த செல்போன் அழைப்பை ஏற்று பேசிக்கொண்டிருந்த பாக்யராஜ் திடீரென மாரடைப்பு ஏற்பட, அப்படியே மயங்கி சரிந்தார். அதனைத்தொடர்ந்து அவர் அருகேயுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பாக்யராஜின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 73.
அதன்பின்னர் பாக்யராஜின் உடல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பாக்யராஜ் உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பாக்யராஜின் உறவினர்களுக்கு ஆறுதலும் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
பாக்யராஜின் உடல் பெசன்ட்நகர் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு, அதன்பின்னர் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் பேரரசு, “பாக்யராஜை அசிங்கப்படுத்த வேண்டாம்” என கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “சினிமாவில் தனது மகன் வெற்றிப்பெறவில்லை என்ற துக்கத்திலும், மகளின் வாழ்க்கை குறித்த கவலையிலும் பாக்யராஜ் இறந்துவிட்டதாக சில ஊடகங்கள் கூறுகின்றன.மேலும், தனது குருநாதர் பாரதிராஜா இறந்த துக்கத்தில் பாக்யராஜ் இறந்ததாக கூறுகின்றனர். தயவுசெய்து பாக்யராஜ் சாரை அசிங்கப்படுத்தாதீங்க” என்று கூறியுள்ளார்.