இயக்குநர் லெனின் பாரதி ‘அரசன்’ திரைப்பட கிளிம்ப்ஸ் வீடியோவை கண்டித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘அரசன்’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘அரசன்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், இடம்பெற்ற பாடல் வரிகளும் வன்முறைக் காட்சிகளும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சமூக அக்கறையையும் அதன் முற்போக்கு அரசியலையும் முன்னிலைப்படுத்தும் இயக்குநர் வெற்றி மாறன் ரவுடிகள் கதைகளை இயக்கி தவறான வழிகாட்டுதல்களைச் செய்கிறார் என எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், இயக்குநர் லெனின் பாரதி, “இளைஞர்களை வன்முறை மற்றும் போதை கலாசாரம் சீரழிக்கும் சூழலில்.. “நூறு பேர மட்ட அடிச்சு சுத்துவேன் சீனா..” “நூறுபேரு சுத்துப்போட்டாலும் தாஸ் அண்ணன் கொக்கி சாமான் தாண்டா பஸ்ட்டு” என வன்முறை வெறியை இளம் மனங்களில் பயிர்செய்து வளர்க்காதீர்கள் வெற்றி மாறன்..” என தன் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.