மும்பை,
படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மற்றும் விஎப்எக்ஸ் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான்கான், இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் நீளமாக இருப்பதாகவும், படத்தின் பெரும்பாலான காட்சிகளை முன்கூட்டியே வெளியிட்டுவிட்டதாகவும் ரசிகர்கள் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மற்றும் விஎப்எக்ஸ் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான்கான், இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது படத்தைப் பற்றியோ, என்னைப் பற்றியோ தவறாக பேசுவதன் மூலம் சிலர் பார்வையாளர்களையும், பின்தொடர்பவர்களையும் அதிகரித்து புகழ் மற்றும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு கடவுள் நல்லது செய்யட்டும்.டிரெய்லர் மிகவும் நீளமாக இருப்பதாகவும், படத்தின் முழு கதையையும் காட்டிவிட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால், நாங்கள் முழு படத்தையும் காட்டவில்லை. டிசம்பர் 4-ம் தேதி முழு படத்தையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன். ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், நீங்கள் ஏற்கனவே டிரெய்லரை பார்த்து படத்தை மதிப்பிட்டு விட்டீர்கள்" என்றார்.
மேலும், படத்தின் காட்சிகள் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதாகவும், சல்மான்கான் சில காட்சிகளில் உண்மையாக நடிக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு பதிலளித்த அவர், "இவர்கள் ஏ.ஐ. நிபுணர்களா? விஎப்எக்ஸ் நிபுணர்களா? சல்மான்கான் இந்த காட்சியில் நடிக்கவில்லை, வேறு யாரோ நடித்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். நான் இதையெல்லாம் நேரடியாக கவனிக்காமல் இருக்கலாம். ஆனால், எனது குழுவினர் அனைத்தையும் கவனித்து வருகின்றனர்” என்றார்.
அபூர்வா லகியா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் 'பேட்டில் ஆஃப் கல்வான்' என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்த படம் பின்னர் 'மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதில் சல்மான்கானுக்கு ஜோடியாக சித்ரங்கதா சிங் நடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.