சினிமா செய்திகள்

வயதை பொருட்படுத்தாதீங்க...55 வயதில் மனிஷா கொய்ராலா வெளியிட்ட புகைப்படம்

'முதல்வன்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

‘முதல்வன்’ மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த மனிஷா

நேபாள அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. 1999-ஆம் ஆண்டு வெளியான ‘முதல்வன்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். தனது சிறந்த நடிப்பு, அழகு மற்றும் நடனத் திறமையால் 80 மற்றும் 90-களின் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார். சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தாய்லாந்து சுற்றுப்பயணத்தில் மனிஷா

இந்நிலையில், நடிகை மனிஷா கொய்ராலா தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு கடற்கரையில் ஓய்வெடுத்து மகிழும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கவர்ச்சியான தோற்றத்தில் வெளியான இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்

புகைப்படங்களுடன் அவர் பகிர்ந்த பதிவில், “உங்கள் உடல் அமைப்பு அல்லது வயதை பொருட்படுத்தாமல், வாழ்க்கையின் எந்த கட்டத்தில் இருந்தாலும் பயணம் செய்யுங்கள். கடற்கரையில் நடந்து செல்லுங்கள். நீச்சல் உடையை அணியுங்கள். உங்கள் தோள்களில் சூரிய ஒளியையும், கால்களுக்கு கீழே மணலின் உணர்வையும் அனுபவியுங்கள்.

பயம் அல்லது மற்றவர்களின் கருத்துகள் உங்களை தடுக்க அனுமதிக்காதீர்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே வாழ்க்கையை முழுமையாக வாழ உங்களுக்கு உரிமை உண்டு” என்று தெரிவித்துள்ளார். மனிஷா கொய்ராலாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.