சென்னை,
ஆணாதிக்கச் சிந்தனையை எதிர்க்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் முற்போக்குச் சிந்தனையையும் துணிச்சலையும் வெகுவாகப் பாராட்டினார்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 1990-களின் பின்னணியில், சாதி சார்ந்த வன்முறை மற்றும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் ‘டோரதி’ பெற்றுள்ளது.
வெளியானது முதலே ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. நடிகர் தனுஷ், நடிகை ஸ்ரீலீலா, இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, இயக்குநர் ராஜு முருகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் இப்படத்தைப் பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், ‘டோரதி’ திரைப்படத்தைப் பார்த்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் செய்தியாளர்களிடம் பேசும்போது படத்தின் கருத்தையும் அதன் முற்போக்குச் சிந்தனையையும் பாராட்டினார்.
மூன்றாம் பாலினத்தவரைச் சமூகம் புறந்தள்ளக் கூடாது என்றும், அவர்களின் உணர்வுகளை மதித்து அங்கீகரிக்க வேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் மிகுந்த துணிச்சலுடன் உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். தற்போது நாடே இப்படம் குறித்துப் பேசிக்கொண்டிருப்பதாகவும், ஆணாதிக்கச் சிந்தனை கொண்டவர்கள் இப்படத்தை ஏற்க முடியாமல் கடுமையாக விமர்சித்து வருவதாகவும் அவர் கூறினார். இறுதியாக, “ஆணாதிக்கம் கொண்ட ஆண்களின் முகத்தில் காரி உமிழக்கூடிய வகையில் ‘டோரதி’ திரைப்படம் அமைந்துள்ளது” என்று திருமாவளவன் பாராட்டினார்.