சினிமா செய்திகள்

துல்கர் சல்மானும் நானும் சென்னையில்.. பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது பள்ளி பருவத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து பேசினார்.

சென்னை,

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உள்ளார். அண்மையில் அளித்த பேட்டியில் தனது பள்ளி பருவத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து பேசினார். மம்மூட்டியின் மகனும் மலையாள திரையுலகில் மட்டுமன்றி தமிழிலும் முன்னணி ஹீரோவாக உள்ள துல்கர் சல்மான் பற்றியும் இந்த பேட்டியில் ஸ்ருதி ஹாசன் பகிர்ந்துள்ளார். ஏனெனில் துல்கர் சல்மானும் ஸ்ருதி ஹாசனும் ஒன்றாகப் படித்தவர்கள்.

துல்கர் சல்மான் குறித்து ஸ்ருதி ஹாசன் கூறியதாவது:

சென்னையில்தான் எங்களின் பள்ளி வாழ்க்கை கடந்தது. இருவரும் சென்னை நகரின் பிரபலமான இரண்டு பள்ளிகளில் படித்தோம். அவ்வப்போது சந்தித்து பேசிக் கொண்டிருப்போம். துல்கர் என்னை “சோம்பி” என்று தான் அழைப்பார். நான் அவனை சந்திக்கும் ஒவ்வொரு முறையும், அவர் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை அதுதான். பல நிகழ்ச்சிகளில் “சோம்பி” பாடலை நண்பர்களுடன் சேர்ந்து பாடிய அனுபவம் உண்டு. அந்த பாடலுக்குப் பிறகுதான் அவர் எனக்கு அந்த பெயரை வைத்தார். அவருடன் படித்த மாணவர்களுக்கு நான் கமல்ஹாசன் மகள் என்றே தெரியும். என் உண்மையான பெயரே தெரியாது என சிரித்தபடி நினைவுகளை பகிர்ந்தார்.

துல்கர் சல்மானும் ஸ்ருதி ஹாசனும் தற்போது ‘ஆகாசம் லோ ஒக்கா தாரா’ என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படம் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது.