சினிமா செய்திகள்

“ஐ அம் கேம்” படத்தின் தோல்வி குறித்து துல்கர் சல்மான் விளக்கம்

நஹால் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த திரைப்படம் ‘ஐ அம் கேம்’.

நடிகர் துல்கர் சல்மான் தான் நடித்த ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்துள்ளார்.

மலையாளத்தில் அவர் நாயகனாக நடித்த ‘ஐ அம் கேம்’ படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.

இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்த இப்படத்தின் சண்டைக் காட்சிகளை அன்பறிவ் வடிவமைத்திருந்தார்.

படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்ததால் ரசிகர்களின் ஆதரவு பெரிதாகக் குறைத்தது. இதனால், இப்படம் குறைவான வணிகத்தைச் செய்தது. சுமார் 80 கோடி பட்ஜெட்டில் தயாரானதாக சொல்லப்பட்ட படம் 50 கோடி வசூலைக் கூட நெருங்கவில்லை என்பது தகவல்.

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் நடிகர் துல்கர் சல்மானிடம் ரசிகர் ஒருவர் ஐஆம் கேம் ஏன் தோல்வியடைந்தது? எனக் கேட்டார்.

இதற்கு துல்கர் சல்மான், “சில நேரங்களில் நமது தரப்பிலிருந்து அனைத்தையும் சரியாகச் செய்தாலும், வெளிப்புறக் காரணிகளோ அல்லது பிற சூழ்நிலைகளோ எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடுகின்றன. ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு 200 முதல் 300 பேர் தேவைப்படுகிறார்கள். இது எளிதானது அல்ல. ஒருபோதும் சாதாரணமானதும் அல்ல. மேலும் இதற்கு எந்த சூத்திரங்களையோ அல்லது கோட்பாடுகளையோ நீங்கள் பயன்படுத்த முடியாது. உலக சினிமாவில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் அல்லது நடிகரும் வேண்டுமென்றே தவறுகளைச் செய்யவோ அல்லது ஒரு மோசமான படத்தை உருவாக்கவோ நினைப்பதில்லை. உங்கள் வாழ்க்கையில் எல்லாமே நீங்கள் நினைத்தபடியே நடந்திருக்கிறதா? அப்படி, பல வெளிப்புறக் குழுக்களுடனும் இயங்கும் ஒரு அமைப்பைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நான் எப்போதும் என் குழுவின் பக்கமே நிற்பேன். யாரையாவது நீங்கள் குறை சொல்ல விரும்பினால் என்னைச் சொல்லலாம்." எனத் தெரிவித்துள்ளார்.

2023ல் வெளிவந்த தெலுங்குப் படமான ‘சீதா ராமம்’ வெற்றிக்குப் பின்பு துல்கர் மலையாளத்தில் நடித்து வெளிவந்த ‘கிங் ஆப் கொத்தா’, ‘ஐ அம் கேம்’ ஆகிய படங்களும், தமிழில் நடித்து வெளிவந்த ‘காந்தா’ படமும் தோல்வியைத் தழுவியது. 2024ல் வெளிவந்த ‘லக்கி பாஸ்கர்’ தெலுங்குப் படம் 100 கோடி வசூலைக் கடந்து வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT