யாஷ் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரில்லர் கதையாக 'டாக்ஸிக்' படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற (மார்ச்) 19ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்துள்ளதாக தாயரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், உலகளாவிய பார்வையாளர்களை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச ரசிகர்களுடன் இணையும் நோக்கில் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 19ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, பரந்த அளவிலான பார்வையாளர்களை சென்றடையும் எங்கள் இலக்கு பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், தயாரிப்பு தரப்பு மற்றும் கூட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வெளியீட்டை மாற்றும் கடினமான ஆனால் கவனமாக பரிசீலிக்கப்பட்ட முடிவை எடுத்துள்ளோம்.
பார்வையாளர்களின் புரிதலும் பொறுமையும் குறித்து நன்றி தெரிவித்துள்ள படக்குழு, தொடர்ந்து வழங்கப்படும் அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்குகிறோம். அதன்படி, ‘டாக்ஸிக்’ திரைப்படம் தற்போது 2026 ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில், ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் வெளியாகும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.