2027-ம் ஆண்டுக்கான 99-வது ஆஸ்கர் விருது விழாவை முன்னிட்டு, பல்வேறு பிரிவுகளில் போட்டியிடத் தகுதி பெற்ற திரைப்படங்களின் பட்டியலை ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி வெளியிட்டுள்ளது. இதில் சர்வதேசத் திரைப்படப் பிரிவில் 104 படங்களும், அனிமேஷன் திரைப்படப் பிரிவில் 38 படங்களும், ஆவணப்படப் பிரிவில் 190 படங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் சார்பில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்ட மராத்தி திரைப்படமான 'கோந்தல்' (Gondhal), சர்வதேசத் திரைப்படப் பிரிவுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் 99-வது ஆஸ்கர் விருதுப் போட்டியில் பங்கேற்பதற்கான அடுத்த கட்ட வாய்ப்பை இப்படம் பெற்றுள்ளது.
சந்தோஷ் தாவகார் இயக்கியுள்ள இந்தப் படம், மகாராஷ்டிராவின் பாரம்பரியமான 'கோந்தல்' நாட்டுப்புறச் சடங்கை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படம், காதல், துரோகம், கொலை மற்றும் உயிர் பிழைப்பதற்கான போராட்டம் ஆகியவற்றைச் சொல்லும் திரில்லர் கதையாக அமைந்துள்ளது. இதில் இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சோஹோனி, நிஷாத் போயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
99-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2027-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. தகுதிப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரையை உறுதி செய்யாது. அடுத்தகட்டத் தேர்வுகளைக் கடந்து 'கோந்தல்' திரைப்படம் இறுதிப்பட்டியலில் இடம்பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்தியத் திரையுலகில் ஏற்பட்டுள்ளது.