சினிமா செய்திகள்

'இது எனது பயணத்தின் தொடக்கம்தான்’... மிஸ் டீன் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்ற பிரசுசி

ஒடிசாவை சேர்ந்த பிரசுசி பண்டா 'மிஸ் டீன் யுனிவர்ஸ் இந்தியா 2026' பட்டத்தை வென்றனர்.

புவனேஸ்வர்,

இந்த பட்டம் எனது பயணத்தின் தொடக்கம் மட்டுமே என மிஸ் டீன் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்ற பிரசுசி கூறி இருக்கிறார்.

பிரசுசி பண்டா

மிஸ் டீன் திவா 2026 போட்டியின் மாபெரும் இறுதிப் போட்டி ஜெய்ப்பூரில் கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதிலுமிருந்து போட்டியிட்ட நூற்றுக்கணக்கான பெண்களில் 37 பேர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்கள் அனைவரையும் தோற்கடித்து, மேகாலயாவைச் சேர்ந்த ஐஸ்வாயர் மலங் மிஸ் டீன் எர்த் இந்தியா 2026' பட்டத்தையும், அசாமை சேர்ந்து ஸ்நித்தா பூயூான் மிஸ் டீன் கிராண்ட் இந்தியா 2026 பட்டத்தையும், ஒடிசாவை சேர்ந்த பிரசுசி பண்டா 'மிஸ் டீன் யுனிவர்ஸ் இந்தியா 2026' பட்டத்தையும் வென்றனர்.

இந்நிலையில், 'மிஸ் டீன் யுனிவர்ஸ் இந்தியா 2026' பட்டத்தை வென்ற பிரசுசி பண்டாவுக்கு, புவனேஸ்வரில் பிரமாண்ட பாராட்டு விழாவில் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தனது வெற்றி குறித்து அவர் மனம் திறந்து பேசினார்.

'இது உணர்வுபூர்வமான தருணம்'

இதுகுறித்து பேசிய பிரசுசி பண்டா, "மிஸ் டீன் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டம் வென்ற பிறகு முதன்முறையாக புவனேஸ்வர் திரும்புவது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணம். சர்வதேச மேடையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமையான விஷயம் மட்டுமல்ல, மிகப்பெரிய பொறுப்பும் கூட. இது எனது பயணத்தின் தொடக்கம் மட்டுமே" என்றார்.

'இன்னும் கடினமாக உழைப்பேன்'

மேலும் அவர், "எனது பெற்றோர், ஒடிசா மாநிலம் மற்றும் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க நான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள மக்களிடமிருந்து எனக்கு கிடைத்த அன்பும் ஆதரவும் எனக்குள் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்தார்.

'இந்தியாவுக்கு சர்வதேச மகுடத்தை வென்று வருவேன்'

தொடர்ந்து பேசிய பிரசுசி பண்டா, "இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது எப்போதும் எனது கனவாக இருந்து வருகிறது. சர்வதேச 'மிஸ் டீன் யுனிவர்ஸ்' மகுடத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர நான் முழு மனதுடன் உழைப்பேன்" என்று கூறினார்.