சென்னை,
ழகரம் ஸ்டுடியோஸ், 2 டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா, ஜோதிகா மற்றும் ஜெயஸ்ரீ தாமோதரன் தயாரிப்பில் ஜீத்து மாதவன் எழுதி இயக்கியுள்ள படம் 'சீன்'. சூர்யா, நஸ்லென், நஸ்ரியா, ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன், சுரேஷ் மதியழகன், கஜராஜ், அனுராதா ஸ்ரீதர் உள்பட பலர் நடித்துள்ள 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த 6-ந்தேதி திரைக்கு வந்தது.
திரையிட்ட நாள் முதல் தற்போது வரை அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'சீன்' படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது:- 'கருப்பு', 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஆகிய இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகரான சூர்யாவின் நடிப்பில் சீன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வெளியாகும் முன்பாகவே இந்த படத்தின் கதை இதுதான், அதுதான் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் புது மாதிரியான கதை என்று ரசிகர்களால் தற்போது இந்த திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
காவல்துறையிலிருந்து ஓய்வு பெரும் எண்ணத்துடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் சூர்யா தனது திறமையை பரிசோதிக்கும் போலீசாருக்கு எதிராகவே களம் இறங்குகிறார். நகரில் நடக்கும் தொடர் கொலைகளின் பின்னணியில் இருக்கும் சைக்கோ கொலைகாரனை கண்டறியும் முயற்சியில் தனி ஆளாக களமிறங்குகிறார். இதில் சூர்யா வெற்றி பெற்றாரா, இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
ஒன் மேன் ஆர்மியாக படம் முழுக்க தாங்கி பிடித்திருக்கிறார் சூர்யா. இன்னும் சொல்லப் போனால் இரண்டாம் பாதியில் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் வகையில் அவரது நடிப்பு அமைந்திருக்கிறது. இந்த ஆண்டில் ஹாட்ரிக் வெற்றி சூர்யாவுக்கு கிடைத்திருக்கிறது. சூர்யாவுக்கு அடுத்தபடியாக இளம் நடிகர் நஸ்லென் கலக்கி இருக்கிறார். காதல் நகைச்சுவை என்று கலகலப்பான வேடத்தில் கலக்கி வந்த அவர் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தி ருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் நஸ்ரியா அழகாலும், அளவான நடிப்பாலும் அசத்தியுள்ளார். ஆனந்தராஜ் செய்யும் லூட்டிகள் ரசிக்க வைக்கிறது. லால், ராஜ் பிரியன், சுரேஷ் மதியழகன், கஜராஜ், அனுராதா ஸ்ரீதர் என அத்தனை பேரும் சிறப்பாக நடித்து அசத்தியிருக்கிறார்கள். வினித் அகஸ்தியன் ஒளிப்பதிவில் காட்சிகள் அத்தனை நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளன. சுசின் ஷியாம் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதமாக அமைந்திருக்கிறது. இப்படி ஒட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக படம் இன்றைக்கு வெற்றிப் படமாக மாறி இருக்கிறது.
திரையிட்ட அத்தனை இடங்களிலும் ரசிகர்கள் கூட்டம் நிறைவாகவே இருக்கிறது. ரிப்பீட் ஆடியன்ஸ் வருகையும் இருக்கிறது. படம் நல்ல திரைக்கதை கொண்ட பொழுதுபோக்கு திரைப்படம் என விமர்சகர்களும் நேர்மறையான விமர்சனங்களை அளித்து வருகிறார்கள். ரசிகர்களின் விமர்சனமும் நிறைவாகவே இருக்கிறது. இது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இத்தனை நாள்பட்ட கஷ்டங்களுக்கு பலனாகவும் அமைந்துள்ளது. ல்ல கதை அம்சம் உள்ள திரைப்படங்கள் என்றுமே ரசிகர்களின் அங்கீகாரத்தை பெற தவறாது என்பது இந்தப் படத்திலும் நிறுவனம் ஆகியுள்ளது. அந்த வகையில் 'சீன்' திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய ரசிகப் பெருமக்கள் அத்தனை பேருக்கும் படக்குழு சார்பில் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் படம் உருவாக மூலகாரணமாக இருந்த தயாரிப்புக் குழு மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சிறப்பு தோற்றத்தில் வந்து அசத்திய டொவினோ தாமஸ் மற்றும் ஜோதிகா ஆகியோருக்கும் எங்களது நன்றிகள். ரசிகப் பெருமக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிப்பதுடன், இன்னும் படம் பார்க்காத ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுகிறோம், என்று படகுழுவினர் தெரிவித்தனர்.