பாலிவுட் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் மாதுரி தீட்சித். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், பெண்களின் தோற்றம் மற்றும் வயதை மையமாக வைத்து சமூகத்தில் நடைபெறும் விமர்சனங்கள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
“பெண்களின் சாதனைகளை விட அவர்களின் வயது, உடல் எடை மற்றும் தோற்றத்தை வைத்தே இன்னும் பலர் மதிப்பிடுகின்றனர். மனிதர்களை வெளிப்புற தோற்றத்தின் அடிப்படையில் அல்லாமல், அவர்கள் செய்த பங்களிப்புகள் மற்றும் தனித்துவத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
தற்போதைய டிஜிட்டல் உலகம் குறித்து பேசிய மாதுரி, “ஒரு திரைப்படத்தை உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்க நிறைய உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால் இன்று ஒரு விஷயத்தை பார்த்த சில விநாடிகளிலேயே அதை விரும்புகிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்து விடுகிறார்கள். அதுதான் இன்றைய உலகம்” என்றார்.
சமீப காலமாக பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், பெண்களின் தோற்றம் மற்றும் வயதை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடும் மனப்போக்குக்கு எதிராக மாதுரி தீட்சித் தெரிவித்துள்ள கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. அவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.