சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கொதித்து பேசினார். 'விவாகரத்து கிடைக்கும் வரை இனி படங்கள் நடிக்க போவதில்லை' என்றும் தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். சபரி மலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து தற்போது விரதத்தையும் ரவிமோகன் தொடங்கியுள்ளார்.
இந்தநிலையில் ரவி மோகனுக்கு, தமிழ் சினிமாவின் மூத்த நடிகை அம்பிகா ஆதரவு தெரிவித்துள்ளார். அம்பிகா வெளியிட்டுள்ள பதிவில், 'ரவி நீ முதலில் பலவீனமாக உணராதே. எல்லாம் சரியாகிவிடும், கடவுள் உன்னைச் சோதிக்கிறார். கொஞ்சம் தாமதிக்கிறார் என்று நினைத்துக் கொள்.
தவறான முடிவுகளை எடுக்காதே, உன்னை நீயே காயப்படுத்திக் கொள்ளாதே. கடவுளிடம் வேண்டிக்கொள், நன்றாக தூங்கு, பெற்றோருடன் இரு அல்லது உன்னை நன்கு அறிந்தவர்களுடன் இரு' என அதில் ஆறுதல் கூறியுள்ளார். இதற்கு முன்னர் நடிகர் ரவி மோகனுக்கு ஆதரவாக நடிகை மீரா சோப்ரா ஆறுதல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.