சென்னை,
மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பகத் பாசில், தமிழில் வேலைக்காரன் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் நடித்தார். கமல்ஹாசனுடன் பகத் பாசில் நடித்த விக்ரம் படம் அவருக்கு திருப்புமுனையானது. ரஜினியின் வேட்டையன், மாரி செல்வராஜின் மாமன்னன், லோகேஷ் கனகராஜின் லியோ, புஷ்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரின் தந்தையான பாசில் மலையாளத் திரைப்பட இயக்குநர் ஆவார்
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகரான அதர்வா 'பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'பராசக்தி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து, ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் ‘இதயம் முரளி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
‘டிராகன்’ படத்தில் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் கயாடு லோஹர் . தற்போது இளைஞர்களின் க்ரஸாகவே கயாடு லோஹர் மாறி உள்ளார். ‘இதயம் முரளி’ படத்தின் மூலம் மீண்டும் நடிகராக களமிறங்குகிறார் தமன். ‘பாய்ஸ்’ படத்துக்குப் பிறகு முழுமையாக இசையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் தமன். ஆனால், இதில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் நடித்துள்ளார்.
ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் ‘பராசக்தி’, ‘இட்லி கடை’ படங்கள் வெளியாயின. அந்தப் படங்களைத் தொடர்ந்து தனது இயக்கத்தில் உருவாகும் ‘இதயம் முரளி’ படத்தினை அவரே தயாரித்துள்ளார்.
இந்நிலையில், ‘இதயம் முரளி’படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் பகத் பாசில் நிறைவு செய்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் வரும் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது.