சினிமா செய்திகள்

காஜல் அகர்வாலின் புதிய பரிமாணத்தை காண காத்திருக்கும் ரசிகர்கள்

நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் சிறப்பு குத்துப் பாடலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால், 2020-ம் ஆண்டு தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய அவர், படங்களில் நடிப்பதை கணிசமாகக் குறைத்திருந்தார்.

கணவர் மற்றும் குழந்தையுடன் குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்த காஜல் அகர்வால், தற்போது மீண்டும் சினிமாவில் முழு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்துள்ள அவர், 'இந்தியன்-3' படத்தில் நடித்து முடித்துள்ளதுடன், தற்போது 'ராமாயணா' படத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் இருக்கும் காஜல், பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. மேலும், திரைப்பட விழாக்கள் மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் கவர்ச்சியான தோற்றத்தில் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இந்த நிலையில், தெலுங்கில் தயாராகி வரும் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் சிறப்பு குத்துப் பாடலில் நடிக்க காஜல் அகர்வாலை படக்குழு அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவருக்கு அதிக சம்பளமும் வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை காஜல் அகர்வால் ஏற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் காஜல் அகர்வாலின் புதிய பரிமாணத்தை காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.