குஷ்பு சுந்தரின் அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா தயாரிப்பில், அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ் கதாநாயகனாகவும், 'கட்சி சேர...' பாடல் மூலம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாத், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன், வி.டி.வி. கணேஷ், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ள புதிய படமான, ‘டபுள் ஆக்கு பன்சி' படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் 'டபுள் ஆக்குபன்சி' படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது:-
இது ஒரு வித்தியாசமான கதை. போஸ் வெங்கட் - வினோதினி தம்பதிக்கு பிறக்கும் குழந்தை வினோதமாக வளர்கிறது. அதாவது பகலில் பெண்ணாகவும், இரவில் ஆணாகவும் அந்த குழந்தை வளர்கிறது. ஆனாலும் இந்த உண்மை இருவருக்குமே தெரியாமல் இருக்கிறது. பகலில் ரேஷ்மாவாக இருக்கும் பெண்ணை வினோத் கிஷன் காதலிக்கிறார். இரவில் சந்தோஷாக உருமாறும் வாலிபரை சம்யுக்தா காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த உண்மை ஒரே உடலில் இருக்கும் இருவருக்கும் தெரிய வருகிறது. இந்த உண்மையை சொல்ல முயற்சிக்கும் போது பல தடைகள் இவர்கள் காதலில் அரங்கேறுகிறது. அந்தத் தடைகளை இவர்கள் எதிர்கொண்டது எப்படி? இறுதியில் எந்த காதல் ஜோடி வெற்றி பெற்றது? பெண்ணாக இருந்து ஆணாக உருமாறும் பிரச்சினை தீர்ந்ததா? என்பது கலகலப்பான மீதி கதை.
பாரில் வேலை செய்பவராக சந்தோஷ் அட்டகாசப்படுத்தியுள்ளார். உருமாற்ற பிரச்சினையில் அவர் சிக்கி படாதபாடு படும் இடங்கள் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. இதுவரை எதிர்மறை கதாபாத்திரங்களில் மட்டுமே மிரட்டி வந்த வினோத் கிஷன் முதல் முறை ஜாலியான கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்துள்ளார். அழகாலும், அளவான நடிப்பாலும் சம்யுக்தா, ரேஷ்மா ஆகியோர் கலக்குகிறார்கள். பக்ஸ், விச்சு வின் வில்லத்தனம் ஓ.கே. ரகம். வி.டி. வி.கணேஷ் காமெடிகள் ஓரளவு சிரிக்க வைக்கிறது. போஸ் வெங்கட், வினோதினி உள்பட நடிகர் - நடிகைகள் அனைவருமே அட்டகாசப்படுத்தியுள்ளனர்.
சாந்தகுமார் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது. சாம் சி.எஸ். இசை படத்துக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. பின்னணி இசையிலும் புகுந்து விளையாடி இருக்கிறார். இப்படி நடிகர் - நடிகைகளின் உழைப்பாலும், படக்குழுவினரின் அர்ப்பணிப்பாலும் டபுள் ஆக்குபன்சி' படம் இன்றைக்கு வெற்றிப்படமாக மாறியுள்ளது. திரையிட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்களின் வரவேற்பு மிகுதியாக இருக்கிறது.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் படத்தை ரசித்து பார்த்து கொண்டாடி வருகிறார்கள். ரிபீட் ஆடியன்ஸ் வருகையும் நன்றாகவே இருக்கிறது. புதிய முயற்சி, நல்ல திரைக்கதை, வித்தியாசமான கதைக்களம், கொண்டாட்டமான படம் என்று விமர்சகர்களும் நேர்மறையான விமர்சனங்களை வழங்கி வருகிறார்கள். நல்ல படங்களை ரசிகர்கள் அங்கீகரிக்க தவறியது கிடையாது. அது இந்தப் படத்திலும் எதிரொலித்துள்ளது. இந்த நல்லதொரு வெற்றியை வழங்கிய ரசிகர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
மேலும் இந்தப்படத்துக்காக புரமோஷன் செய்த நடிகை குஷ்புக்கு நன்றி. இந்தப்ப டத்துக்காக உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி. இத்தனை நாட்கள் பட்ட கஷ்டத்துக்கு வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், இன்னும் படம் பார்க்காத ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்து ஆதரவு தரவேண்டுகிறோம் என்று “டபுள் ஆக்குபன்சி' படக்குழுவினர் தெரிவித்தனர்.