சினிமா செய்திகள்

நில ஆக்கிரமிப்பு செய்ததாக நடிகை சோனாலி பிந்த்ரே மீது கோர்ட்டில் விவசாயி வழக்கு

நடிகை சோனாலி பிந்த்ரே மற்றும் அவரது கணவர் மீது விவசாயி ஒருவர் நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளார்.

புனே,

தமிழில் வெளியான காதலர் தினம் படத்தில் நடித்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே. இவர் மற்றும் இவரது கணவர் கோல்டி பெல் மீது புனேயை சேர்ந்த விவசாயி சந்திரகாந்த் பாலு ஷிண்டே(வயது50), அவரது தாய் கமல்பாய்(75) ஆகியோர் நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளனர். அவர்கள் தாக்கல் செய்து உள்ள மனுவில், "புனே மாவட்டம் மாவல் தாலுகா உக்சன் கிராமத்தில் எங்களது கட்டுப்பாட்டில் 32 ஆயிரம் சதுர அடி குத்தகை நிலம் உள்ளது.

அந்த நிலத்தை எங்களுக்கு தெரியாமல் உரிமையாளர் விற்பனை செய்து விட்டார். அந்த நிலத்தின் ஒரு பகுதியை 2021-ம் ஆண்டு நடிகை சோனாலி பிந்த்ரேவின் கணவர் கோல்டி பெல் வாங்கி உள்ளார். அந்த நிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முயற்சி செய்தனர். அதை தடுத்தபோது எங்களுக்கு மிரட்டல் விடுத்தனர். உள்ளூர் போலீசார் எங்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்ய இருப்பதாக மிரட்டுகிறார்கள்.

நடிகை சோனாலி பிந்த்ரே மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை வருகிற 24-ந் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் பொய் வழக்கு போடப் பட்டுள்ளதாக நடிகை சோனாலி பிந்த்ரே, அவரது கணவர் கோல்டிபெல் கூறியுள்ளனர்.