சர்வதேச பட விழாக்களில் அபிலாஷ் தேவனின் “தாய்நிலம்” திரைப்படம் அக்டோபர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தாய்நிலம்’. டாக்டர் அமர் ராமச்சந்திரன், நேகா அமர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் தீபக் பிரபாகர், பத்மஜா, நிமிஷா நம்பியார், குரு தட்சணா, தளபதி ஆனந்த், சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அபிலாஷ் இயக்குநர் ஐ.வி.சசியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
போர் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து உறவினர் வீட்டில் தனது மகளை ஒப்படைத்துவிட்டு செல்வதற்காக தமிழகம் வருகிறார் தந்தை. ஆனால் உறவினர்கள் அவரது மகளை தங்களுடன் வைத்துக்கொள்ள மறுத்துவிட, தந்தையும் மகளும் தெருவில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு தந்தை தனது மகளின் சந்தோஷத்துக்காக என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை இந்தப்படம் சொல்கிறது.
இப்படத்திற்கு அவுசப்பச்சன் இசையமைத்துள்ளார். படத்தின் இரண்டு பாடல்களை தாமரை மற்றும் பழனிபாரதி எழுதியுள்ளனர். மலையாளத்தில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அவுசப்பச்சன் ‘தாய்நிலம்’ படத்துக்கு இசையமைத்திருப்பதன் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.
பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கவனம் பெற்ற இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. இப்படம் அக்டோபர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.