சினிமா செய்திகள்

'அரசன்' படப்பிடிப்பு பணி நிறைவு.. வீடியோ வெளியிட்டு அறிவித்த சிம்பு

'அரசன்' திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

சென்னை,

வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் 'அரசன்' திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அரசன் படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவடைந்துள்ளதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார்.

வடசென்னை பின்னணியில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீபாவளி வெளியீட்டை இலக்காகக் கொண்ட படக்குழு

கடந்த சில நாட்களுக்கு முன்பு 'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு, படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. தீபாவளி வெளியீட்டை இலக்காகக் கொண்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு பகலாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

படப்பிடிப்பு நிறைவு... வைரலாகும் வீடியோ

இந்த நிலையில், 'அரசன்' திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், "இந்த ஷெட்யூல் முடிந்தது" என்று அறிவித்தவுடன், படக்குழுவினரும் சிலம்பரசனும் உற்சாகமாக கொண்டாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு சிலம்பரசன் கை கொடுத்து வாழ்த்து தெரிவிக்கும் தருணங்களும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், 'அரசன்' திரைப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.