சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது தனது 26வது திரைப்படமான ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். கமல் ஹாசன் தயாரிப்பில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து உருவாக்கும் இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை சிவகுமார் முருகேசன் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார். மேலும் பால சரவணன் மற்றும் அருள்தாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
‘விருமாண்டி’ படத்தைப் போல கருமாத்தூர் தெய்வங்களை மையமாகக் கொண்டு, மதுரை பின்னணியில் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த கிராமப்புற குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ‘சேயோன்’ உருவாகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வருகிற 27-ஆம் தேதி முதல் மதுரை பகுதியில் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளன. குறிப்பாக கள்ளழகர் ஆற்றங்கரை உள்ளிட்ட இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிந்த பின்னரே சிவகார்த்திகேயன் நடிக்கும் காட்சிகள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அடுத்த கட்ட அப்டேட்களுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.