கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா முதலில் கன்னட படத்தில் அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்திய நடிகையாக மாறியுள்ளார்.சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகிவிட்டார். ‘ரணபலி’ படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா தம்பதி சமீபத்தில் இணைந்து நடித்தனர்.
இதற்கிடையில், ரவீந்திர புல்லே இயக்கும் ‘மைசா’ படத்தில் போர் வீராங்கனை போல அதிராடியான கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதன் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி எதிர்பார்பை எகிற வைத்திருக்கிறது. அன்பார்முலா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார்.
‘புஷ்பா 2’ பட வில்லன் தாரக் பொன்னப்பா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கேஜிஎப், தேவரா படங்கள் மூலம் கவனிக்கப்பட்ட தாரக் பொன்னப்பா, சமீபத்தில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இது ராஷ்மிகாவுடன் அவர் நடிக்கும் இரண்டாவது படமாகும்.
இந்நிலையில், ‘மைசா’ படத்தின் முக்கிய காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் நிறைவடைந்துள்ளதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், நண்பர்களே, ‘மைசா’ படத்திற்கான நீண்ட கால படப்பிடிப்புத் தொகுப்பை (schedule) கேரளாவில் நாங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம்! இதையெல்லாம் சாத்தியமாக்கும் வகையில், மிகக் கடுமையாக உழைத்த அன்பான கலைஞர்கள் இவர்கள்தான்! உங்கள் அனைவருக்கும் நன்றி... விரைவில் மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் சந்திப்போம்! என்று பதிவிட்டுள்ளார். மேலும், சண்டை காட்சிக்காக தனக்கு பயிற்சி கொடுத்த குழுவினருக்கும் நன்றி தெரிவித்து மற்றொரு பதிவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.