தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்றாலே புத்தாடை, கொண்டாட்டம் மட்டுமின்றி புதிய திரைப்படங்களின் வெளியீடும் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வருவது வழக்கம். அந்த வகையில், 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் சில முக்கியமான திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள படங்கள் குறித்து பார்ப்போம்.
நடிகர் அஜித்குமாரின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் கார் பந்தயப் பயணத்தை மையமாகக் கொண்டு ‘கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்’ என்ற ஆவணப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அஜித்குமாரின் மனைவி ஷாலினி இப்படத்தைத் தயாரித்துள்ளார். அஜித்தின் கார் பந்தய அனுபவங்களையும், சவால்களையும் பதிவு செய்துள்ள இந்த ஆவணப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘புருஷன்’. இதில் தமன்னா பாட்டியா கதாநாயகியாகவும், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். சுந்தர் சி. - விஷால் கூட்டணியில் உருவாகும் இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார் விஜே சித்து. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘டயங்கரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குவதுடன் கதாநாயகனாகவும் விஜே சித்து நடித்துள்ளார். நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத் கான், கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் புரமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அஜய் ஞானமுத்து எழுதி இயக்கும் ‘டிமான்டி காலனி 3’ திரைப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ளார். 2015-ம் ஆண்டு வெளியான ‘டிமான்டி காலனி’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்தப் படம், ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். முந்தைய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இயக்குநர் பா. ரஞ்சித் எழுதி இயக்கி வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இதில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்து வருகின்றனர். மேலும், அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. சோபிதா துலிபாலா கதாநாயகியாக நடிக்கிறார். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகும் இப்படம், பா. ரஞ்சித்தின் வித்தியாசமான படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை தவிர, மேலும் சில திரைப்படங்களும் 2027 பொங்கல் வெளியீட்டுப் பட்டியலில் இணைய வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியுள்ளது.