பெங்களூரு,
பெங்களூருவில் நள்ளிரவில் பட்டாசு வெடிக்க எதிர்ப்பு தெரிவித்து மந்திரி பிரியங்க் கார்கேவுக்கு நடிகை ரம்யா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நடிகை ரம்யா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
பெங்களூருவில் நள்ளிரவு 3 மணி. இந்த நேரத்திலும் அரண்மனை மைதானத்தில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்கின்றன. இசை நிகழ்ச்சிகள் அதிக சத்தத்துடன் நடக்கிறது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க, அதிக ஒலி எழுப்ப சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால் சில விழாக்களின் சில தளர்வுகள் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நள்ளிரவு நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. அதனை சுற்றிலும் ஆஸ்பத்திரிகள் உள்ளன. வயதானவர்கள், குழந்தைகள் வசிக்கிறார்கள்.
பள்ளிகள் இன்று (நேற்று) மீண்டும் திறக்கப்பட்டன. நான் நள்ளிரவு 2.30 மணிக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தேன். போலீஸ் மந்திரி பிரியங்க் கார்கே, போலீஸ் கமிஷனருக்கு புகார் தெரிவித்துள்ளேன். இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன். சிவமொக்கா தசரா விழாவில் சோமண்ணா யானை மிரண்டு ஓடியுள்ளது.
குறுகிய தெருக்களில் அந்த யானையை அழைத்து சென்றுள்ளனர். மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடி இருந்தனர். இதனால் அந்த யானை மிரண்டு ஓடியுள்ளது. இதில் அந்த யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அந்த யானையை ஒரு லாரியில் ஏற்றிச் சென்று சிகிச்சை அளிக்க கூட முடியவில்லையா?. வனத்துறை மந்திரி ராமலிங்கரெட்டிக்கு வன உயிரினங்கள் மீது அதிக அக்கறை இருக்கிறது என்பது எனக்கு தெரியும். உடனே அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். முகாமில் உள்ள யானைகளை இத்தகைய ஊர்வலத்துக்கு பயன்படுத்த கூடாது. வன உயிரினங்கள் மீது கருணை காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.