சினிமா செய்திகள்

உன்னி முகுந்தன் நடிக்கும் 'மார்கோ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

உன்னி முகுந்தன் நடிக்கும் 'மார்கோ'படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில் இவர் நடிப்பில் வெளியான மாளிகப்புரம் திரைப்படமும் கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருபவர். அந்த வகையில் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் உன்னி முகுந்தன்.

அடுத்ததாக உன்னி முகுந்தன் நடிப்பில் 'மார்கோ' எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஹனீப் அடேனி இயக்குகிறார். படத்திற்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய கே ஜி எப், சலார் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இதற்கு இசை அமைத்துள்ளார். சமீர் முகமது படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மூணாறு போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் ரத்தம் தெறிக்க தெறிக்க உன்னி முகுந்தன் காணப்படுகிறார். இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது மட்டுமில்லாமல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த போஸ்டரில் இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT