சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி. பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'ஹேப்பி ராஜ்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீண்டகால இணை இயக்குநரான அகிரன் மோசஸ் இயக்கியுள்ள 'வெக்கை' திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி வில்லனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷிவானி ராஜசேகர் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் சமூக கருத்துகளை வலியுறுத்தும் வகையில் உருவாகி, ரசிகர்களிடையே விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் 'வெக்கை' திரைப்படமும் முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 'வெக்கை' திரைப்படத்தின் முதல் பாடலான 'நைட்டு நிலா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை கானா பாலா பாடியுள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே 'நைட்டு நிலா' பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.