சென்னை,
பிரபல பின்னணி பாடகர்களான திப்பு- வாரிணி தம்பதியின் மகனாக இசை உலகில் அடியெடுத்து வைத்தவர் சாய் அபயங்கர். சிறு வயதிலிருந்தே இசைச் சூழலில் வளர்ந்த அவர், தனித்துவமான இசை முயற்சிகளின் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ போன்ற பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து அவர் இசையமைத்த ‘டியூட்’, ‘பல்டி’ போன்ற திரைப்படங்களின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது ‘கருப்பு’, ‘பென்ஸ்’, ‘கர’ உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துவரும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சாய் அபயங்கர் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை தேவயானி மேடையிலேயே அவரிடம் கோரிக்கை வைத்தார். அதாவது, மேடையில் சாய் அபயங்கரிடம் பேசிய தேவயானி, "முதலில் சாய் அபயங்கரின் அம்மா-அப்பாவின் ரசிகை நான். இப்போது சாய் அபயங்கரின் ரசிகை. என் மகளும் அவரின் ரசிகைதான். என் மகள் இனியா நன்றாக பாடுவாள். அவளுக்கு உங்களுடன் பாட வேண்டும் என்பதுதான் கனவு. எதாவது வாய்ப்பு இருந்தால் என் மகளுக்கு கொடுங்கள்" என்று தெரிவித்தார்.