சினிமா செய்திகள்

தயாரிப்பு நிறுவன பெயரில் மோசடி: நடிகர் சிவகார்த்திகேயன் எச்சரிக்கை

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் சிவகார்த்திகேயன், நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறார். அவரது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் ‘கொட்டுக்காளி’, ‘தாய்க்கிழவி’, ‘ஹவுஸ் மேட்ஸ்’ உள்ளிட்ட பல படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே அவரது தயாரிப்பு நிறுவனப் பெயரைப் பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதை நம்ப வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "எங்கள் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் திரைப்படங்களுக்கான நடிகர் தேர்வு தொடர்பாக இயக்குநர்களோ, ஒருங்கிணைப்பாளர்களோ, காஸ்டிங் ஏஜென்ட்களோ அல்லது மூன்றாம் தரப்பு பிரதிநிதிகளோ நியமிக்கப்படவில்லை. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பான அதிகாரப்பூர்வமான நடிகர்/நடிகை தேர்வு அறிவிப்புகள் அல்லது தகவல்கள் எங்கள் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும். இதற்கு மாறாக வரும் வாட்ஸ்அப் செய்திகள், மின்னஞ்சல்கள், அழைப்புகள் அல்லது சமூக வலைதள பதிவுகளை நம்ப வேண்டாம். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.