சினிமா செய்திகள்

'கும்கி'யில் இருந்து 'சிறை' வரை, காது கேட்காத தவளையாகவே பயணிக்கிறேன்- நடிகர் விக்ரம் பிரபு

25 ஆண்டுகள் கடந்தும், இதுதான் ஆரம்பம் என்பது போல நகருகிறேன் என விக்ரம்பிரபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்து சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, எல்.கே.அக்ஷய்குமார், அனிஷ்மா ஆகியோர் நடித்த 'சிறை' படம், கடந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வந்தது. ஓ.டி.டி.யிலும் வெளியாகி வரவேற்பை பெற்ற 'சிறை' படத்தின் வெற்றியை படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.

இதில் விக்ரம் பிரபு பங்கேற்று பேசுகையில், “ஒவ்வொரு படமும் நடிக்கும்போதும் தாத்தாவின் (சிவாஜி) பெயரையும், அப்பாவின் (பிரபுவின்) பெயரையும் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பும், பயமும் என்னை சூழ்ந்து கொள்கிறது. அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் சொன்னது போல, காது கேட்காத தவளையாகவே சினிமாவில் பயணித்து வருகிறேன்.

'கும்கி'யில் இருந்து 'சிறை' வரை, காது கேட்காத தவளையாகவே இருந்து வருகிறேன். வெற்றியும், தோல்வியும் சந்தித்து வருகிறேன். சினிமாவில் உள்ள அரசியல், தட்டியும், தூக்கியும் விடும் ஆசாமிகள் என எல்லா விஷயங்களையும் கற்றுக்கொண்டுள்ளேன். 25 ஆண்டுகள் கடந்தும், இதுதான் ஆரம்பம் என்பது போல நகருகிறேன். முதல் படத்தில் 'கும்கி' யானையை பிடித்து சென்றதுபோல, ஒவ்வொரு நாளும் இந்த சினிமாவின் கையை பிடித்து சென்று கொண்டிருக்கிறேன்”, என்றார்.