சென்னை,
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், வருகிற 25-ந் தேதி 4 தமிழ் திரைப்படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. அந்த திரைப்படங்கள் குறித்த தகவல்களை தற்போது பார்க்கலாம்.
ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘மீசைய முறுக்கு 2’. இப்படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும், கேத்திகா சர்மா, யூடியூபர் ஹர்ஷத் கான், நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தனது 10-வது திரைப்படமாக ‘டோரதி’ படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன், ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் நடிகை ஸ்ரிதா ராவ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கங்கை அமரன், நடிகை ரோஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர்கள் ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் மறைந்த இயக்குநர் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிச்செழியன், ‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
முன்னதாக அசோக் செல்வன் நடித்த ‘அன்பில் அவன்’ திரைப்படமும் 25-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் இப்படத்தின் வெளியீடு அக்டோபர் 2-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனால், வருகிற 25-ந் தேதி ஒரே நாளில் 4 தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. ஒரே நாளில் வெளியாகும் இந்த திரைப்படங்களில் ரசிகர்களின் கவனத்தை எந்த படம் அதிகமாக ஈர்க்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.