'அவள் பெயர் தமிழரசி', 'விழித்திரு' படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் இப்போது புதுமுக நடிகர்களை வைத்து ‘ஹபீபி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குனர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "திரைத்துறைதான் இன்று தமிழ்நாட்டு அரசியலில் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது சினிமா துறை ஜாம்பவான்களை மக்கள் தங்களின் தலைவர்களாக உள்வாங்கியுள்ளனர். கேரியரின் உச்சத்தில் இருந்து சிஎம் ஆகியுள்ள அவர், காலை 9:30 மணி முதல் மாலை வரை ஒரு அரசு ஊழியரைப் போல அர்ப்பணிப்புடன் தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவது ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் அளிக்கிறது. சினிமாவில் சிறுபான்மையினர் யார் என்று பார்த்தால், அது இந்த சின்ன மற்றும் நல்ல படங்களை எடுப்பவர்கள்தான். தியேட்டர்கள் கிடைக்காமலும், ரிலீஸ் செய்ய முடியாமலும் போராடும் இத்தகைய நல்ல படங்களுக்குப் புதிய அரசு தகுந்த உதவிகளைச் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.