சென்னை,
இந்தியாவின் பிரபலமான ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் உள்ளது. வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பிரதர் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, முதலில் இந்தியில் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளிலும் அறிமுகமானது.
பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் 24 மணி நேரமும் கேமராக்களின் கண்காணிப்பில் ஒன்றாக வசிப்பார்கள். அவர்களுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் பணிகள் வழங்கப்படும். வாரந்தோறும் பார்வையாளர்களின் வாக்கெடுப்பு உள்ளிட்ட முறைகளின் அடிப்படையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். இறுதியில் வெற்றி பெறுபவருக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும்.
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் தற்போது இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தமிழில் நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். ஒவ்வொரு சீசனுக்கும் தொகுப்பாளர்களாக பங்கேற்கும் பிரபலங்கள் பெறும் சம்பளம் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்படி, இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கான், ஒரு சீசனுக்கு ரூ.200 கோடி சம்பளம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்காலி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சௌரவ் கங்குலி, ரூ.125 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி, ரூ.75 கோடி முதல் ரூ.80 கோடி வரை சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நாகார்ஜுனா, ரூ.35 கோடியும், மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மோகன்லால், ரூ.30 கோடியும் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கிச்சா சுதீப், ரூ.20 கோடி சம்பளம் பெறுவதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.