நடிகர் ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர் எக்ஸ்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து ஆர்யா, இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் ‘சார்பட்டா’ இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், 'ரன் பேபி ரன்' படத்தை இயக்கிய ஜியென் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘அனந்தன் காடு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரித்த இப்படத்தில் நிகிலா விமல், இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற 25ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனந்தன் காடு படம் குறித்து பேசிய ஆர்யா, "இந்த படத்தின் கதை திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டது. அதனால் பாதி தமிழ், பாதி மலையாளம் இடம்பெறும். இதை இரு மொழிகளில் தனித்தனியாக எடுக்கலாமா அல்லது மலையாளத்தில் மட்டும் எடுத்து தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடலாமா என்ற குழப்பம் இருந்தது. இறுதியில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் தனித்தனியாக படமாக்க முடிவு செய்தோம்," என்றார்.
மேலும் அவர், "இரு மொழிகளிலும் உருவாகியுள்ள 'அனந்தன் காடு' படத்தை விரைவில் தமிழகத்தில் வெளியிட உள்ளோம். இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உணர்வுப்பூர்வமான காட்சிகள் நிறைந்த திரைப்படமாக இது இருக்கும்," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, "இதற்குப் பிறகு எனது 40-வது படத்தில் நடிக்க உள்ளேன். அது முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் காதல் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்," என்றும் ஆர்யா கூறினார்.