சென்னை,
நடிகர் கவுதம் ராம் கார்த்திக் மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தில் அறிமுகமாகி தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, பத்து தல உள்ளிட்ட படங்கள் வெற்றிப்படமாகின. இதற்கிடையே, நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்துகொண்டார். கவுதம் ராம் கார்த்திக் படங்கள் சமீபத்தில் கவனம் பெற்று வருகின்றன. கடைசியாக ‘பத்து தல’ படத்தில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது தினா ராகவன் இயக்கத்தில் ‘ஜி.ஆர்.கே 19’ , சூரியபிரதாப் இயக்கத்தில் ‘ரூட்’ படத்தில் நடித்துவருகிறார்.
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'எப்.ஐ.ஆர்' படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், அடுத்ததாக ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆக்சன் திரில்லர் கதையாக உருவான இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா நடித்துள்ளார். மேலும், சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன்,காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார்.
திபு நிபுணன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஸ்பை திரில்லர் கதை களத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கியுள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் வரும்17ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இந்த நிலையில், கவுதம் ராம் கார்த்திக் 96 கிலோ எடையில் இருந்து உடல் எடையைக் குறைத்துள்ளதாக அவர் எக்ஸ் பதிவில் கூறியுள்ளார். அதில் “9 மாதங்களின் ரத்தம், வியர்வை, அழுகை, எல்லைகளை மீறுதல், பசியை அடக்குதல், தொடர்ச்சியாக உழைத்தல், பழைய காயத்தில் இருந்து மீளுதல். எனது பயிற்சியாளர் தினேஷ் உதவியுடன் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்துக்கு தயாரானேன். என்னுடைய வாழ்க்கையில் இது மிகப்பெரிய மாற்றம். இந்தக் கதாபாத்திரத்தில் என்னை நம்பியதற்கு எனது இயக்குநர் மற்றும் எனது நண்பர் மனு ஆனந்துக்கு எப்போதும் நன்றியுணர்வுடன் இருப்பேன்” என கூறியுள்ளார்.