சினிமா செய்திகள்

’கீதா கோவிந்தம்’ - பிளாக்பஸ்டர் படத்தை நிராகரித்த ஹீரோயின்...யார் தெரியுமா?

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கீதா கோவிந்தம்’.

சென்னை,

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கடந்த மாதம் 26ஆம் தேதி உதய்பூரில் நடைபெற்றது.

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கீதா கோவிந்தம்’. பரசுராம் இயக்கிய இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. ஆனால் இந்த வெற்றி படத்தில் முதலில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டவர் ராஷ்மிகா அல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த படம் பல நடிகைகளிடம் சென்ற பிறகே ராஷ்மிகாவிடம் வந்துள்ளது.

அவர்களில் ஒருவராக ஆக்சன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ‘சீதா பயணம்’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான ஐஸ்வர்யா, ‘கீதா கோவிந்தம்’ பட வாய்ப்பை தவறவிட்டது குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், “சீதா பயணம் படத்திற்கு முன்பே எனக்கு தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’ பட வாய்ப்பு வந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. அந்த படம் பல நடிகைகளிடம் சென்றதாகவும் பின்னர் கேள்விப்பட்டேன். இறுதியில் அந்த படம் சிறப்பாக அமைந்தது. நான் நடிக்க தவறிய பல படங்கள் பின்னர் பெரிய வெற்றி பெற்றிருக்கின்றன,” என்றார்.

நடிகை லாவண்யா திரிபாதி , ராஷி கண்ணா மற்றும் அனு இம்மானுவேல் ஆகியோரும் சில காரணங்களால் இந்தப் படத்தை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.