சினிமா செய்திகள்

"விஜய் சார கேட்டதா சொல்லுங்க".. சிட்னியில் திரிஷாவை நோக்கி குரல் எழுப்பிய ரசிகர்கள்

நடிகை திரிஷா ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சிட்னியில் கடை திறப்பு விழாவில் பங்கேற்ற திரிஷா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். மேடையில் பேசிய திரிஷாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

"எனக்கு மிகவும் பிடித்த நகரம் சிட்னி"

நிகழ்ச்சியில் பேசிய திரிஷா, "உலகின் பல்வேறு நாடுகளுக்கு நான் வேலை காரணமாக பயணம் செய்துள்ளேன். ஆனால், அதில் எனக்கு மிகவும் பிடித்த நாடுகளில் ஒன்று ஆஸ்திரேலியா. குறிப்பாக சிட்னி நகரம் எனக்கு மிகவும் பிடிக்கும்," என்று தெரிவித்தார்.

இந்தியர்கள், இலங்கை தமிழர்களுக்கு நன்றி

தொடர்ந்து பேசிய அவர், "இங்கு ஏராளமான இந்தியர்களையும், இலங்கை தமிழர்களையும் பார்க்கும்போது, நான் சொந்த நாட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அந்த அன்புக்கும், வரவேற்புக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. எனது திரைப்படங்களை தொடர்ந்து பார்த்து ஆதரவு அளித்து, அன்பு செலுத்தும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி," என்று கூறினார்.

"விஜய் சார கேட்டதாக சொல்லுங்க"

திரிஷா பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த சில ரசிகர்கள் "விஜய் சார கேட்டதாக சொல்லுங்க" என்று உரக்கக் குரல் எழுப்பினர். அதே நேரத்தில், மற்றொரு தரப்பினர் "தமிழ்ல பேசுங்க" என்றும் கோரிக்கை விடுத்தனர். இரண்டையும் கேட்ட திரிஷா, தமிழில் பேசுங்கள் என்று கூறியவர்களை நோக்கி மட்டும் இங்கிருப்பவர்கள் மிக அழகாக அழகாக தமிழ் பேசுகிறீர்கள். உங்களை பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி," என்று தமிழிலேயே பதிலளித்தார்.

திரிஷாவின் இந்த பதிலுக்கு அரங்கில் இருந்த ரசிகர்கள் பலத்த கரகோஷம் எழுப்பியதுடன், விசில் சத்தம் முழங்க உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.